Sunday, October 29, 2006

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா ஆஸி இன்று மோதல்

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா ஆஸி இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் பங்கு பெறும் அணியை முடிவு செய்யும் முக்கிய போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன.காயம் காரணமாக இன்று ஆடும் இந்திய போட்டியில் யுவராஜ் சிங் விளையாடவில்லை.வேகப்பந்துவீச்சாளர் அகார்கரும் காயமுற்றுள்ளதால், அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம்பெறுகிறார்.
இன்றைய ஆட்டக்களம் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாங்கள் கடைசியாக ஆடிய பல ஆட்டங்களை விடவும் இந்த ஆட்டத்திற்கு அதிகமான தயாரிப்பு தேவைப்பட்டுள்ளதாக தெரிவித்த
பான்டிங், எந்த விதமான சாக்குபோக்குகளையும் தனது வீரர்களிடம் இருந்து தான் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.முதலில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது உபயோகிக்கப்பட்ட ஆடுகளத்தில்
தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இப்போது நியூசிலாந்து பாகிஸ்தான் ஆடிய களம் உபயோகிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது என்றாலும் இரண்டு அரைசதங்களால் தொடரின்
அதிக பட்ச ரன்களான 284 ரன்களை குவித்து பாகிஸ்தானை அபாரமாக வெற்றி கொண்டது நினைவிருக்கலாம்.அந்த ஆடுகளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் கூட, ஆடுகளத்தின் இயல்பான பண்பு
அதிகம் மாறியிருக்காது என்று இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தனக்கு மொகாலி ஆடுகளத்தில் நல்ல பரிச்சயம் உள்ளது என்று கூறிய டிராவிட் அங்கு எப்போதுமே கொஞ்சம் பவுன்ஸ் ஆகும் தன்மை இருக்கும் என்று கூறினார். இது போன்ற ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி, ஹர்பஜன் சிங் போன்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கும் மிகுந்த உதவியளிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'பி' பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 'ஏ' பிரிவில் இருந்து மேற்கு இந்திய தீவுகள் அணி ஏற்கனவே அரையிறுதியில் இடம் பிடித்து விட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணியாக இருக்கும்.
அணிகள் :
இந்தியா: டென்டுல்கர், சேவாக், பதான், டிராவிட், முகமது கைபு, தினேஷ் மோங்கியா, தோனி,ஹர்பஜன் சிங், முனாப் படேல், ஆர் பி சிங், ஸ்ரீசாந்த்.
ஆஸ்திரேலியா: ஷேன் வாட்ஸன், ஆதம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், டேமியன் மார்டின், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், மைகேல் கிளார்க், மைகேல் ஹஸ்ஸி, பிரெட் லீ, நாதன் பிராக்கன், க்ளென் மெக்ராத்,
மிட்செல் ஜான்சன்.
நன்றி msn தமிழ்